''இலங்கை அகதிகளை பொறுப்பேற்க போகின்றோம்.. ராஜபக்ஷக்களே குழப்புகின்றனர்.." அரசாங்கம்


இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம். தமிழர்கள் என்பதால் கைது செய்யப்படுவதாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ராஜபக்ஷர்களின் ஒருசில அவதாரங்கள் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது   என  சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை  ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் ஏன்  இடைநிறுத்தியது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றில் நேற்று உரையாற்றி அவர்,

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகாலமாக அகதிகளாக வாழும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்றளவில் தீர்க்கப்படவில்லை.

110000 இலங்கையர்கள் இந்தியாவில் அகதிகளாக இருந்ததாக குறிப்பிடப்பட்டது. இதில் 28500 பேர் இலங்கை குடியுரிமையும், இந்திய குடியுரிமையும் இல்லாத நிலையில் இருந்தார்கள்.

இவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக முன்னாள் பிரதமர்  ரத்னசிறி விக்கிரமநாயக்கவின் பங்குப்பற்றலுடன் பாராளுமன்றத்துக்கு பிரேரணையொன்றை கொண்டு வந்தோம்.

ஒரு உறுப்பினரை தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் அந்த பிரேரணைக்கு ஆதரவளித்தார்கள்.இதன் பின்னரே அந்த 28500 பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சுமார் 6000 பேர் வரையிலானோர் இலங்கைக்கு வந்து மீள்குடியேறியுள்ளார்கள்..

இந்தியாவில் அகதிகளாக இருந்து இலங்கைக்கு திரும்பியவர்களை மீள்குடியமர்த்த தனிப்பட்ட முறையில் தலையீடு செய்துள்ளேன். கனகபுரம், பாரதிபுரம் ஆகிய பிரதேசங்களுக்கும் சென்று மீள்குடியேற்ற பணிகளை ஆராய்ந்துள்ளேன்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் அகதிகளை கைது செய்வதாக தற்போது குறிப்பிடப்படுகிறது. சின்னையா சிவலோகநாதன் என்பவர் நாடு திரும்பிய போது அவர் யாழ்.பலாலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இவ்விடயத்தில் நான் தலையீடு செய்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின்  அறிவுறுத்தல்களுடன்  சிவலோகநாதன் என்பவர் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்க பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இலங்கைக்கு வரும் அகதிகளை கைது செய்வது அரசாங்கத்தின் கொள்கையல்ல,அவ்வாறு கைது செய்வது தவறு .

நாங்கள் நாட்டை நிர்வகிக்கிறோமே தவிர குடும்பத்தை நிர்வகிக்கவில்லை. அரச அதிகாரிகளில் ஒருசிலர் செய்யும் தவறுகளை அரசாங்கத்தின் தவறு என்று குறிப்பிடுவது முறையற்றது.  


தமிழ் அகதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேண்டுமென்றே நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கிறது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஒருசிலர் பல்வேறு வகையில் செயற்படுகிறார்கள்.  ராஜபக்ஷர்களின் அவதாரமாகவே இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் இனவாதத்துடன் செயற்படுகிறார்கள் என்றார்.